என் மலர்
நீங்கள் தேடியது "புதுச்சேரி அரசு"
- ஒரு குடும்பத்தில் ஒரு பெண் அல்லது மாணவிக்கு மட்டுமே வாழ்நாளில் ஒருமுறை இந்த உதவி பெற தகுதியுடையவர் ஆவர்.
- முதுகலைப் பட்டப்படிப்பாக இருந்தால், இளங்கலை பட்டப்படிப்புத் தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நிலையில் அனைத்து திட்டங்களையும் என்.ஆர்.காங்கிரஸ்.,- பா.ஜ.க. கூட்டணி அரசு வேகப்படுத்தி வருகிறது.
குடும்ப தலைவிகளுக்கு தற்போது வழங்கப்படும் மாதத்தொகை ரூ.2 ஆயிரத்து 500 உயர்வு, மஞ்சள் ரேசன் கார்டு குடும்ப தலைவிகளுக்கும் மாத உதவி தொகை, முதியோர், விதவை உதவி தொகை ரூ.500 உயர்வு, அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் 2 கிலோ இலவச கோதுமை ஆகிய திட்டங்கள் விரைவில் நடைமுறைபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெண்களை கவரும் வகையில் முதல்-அமைச்சரின் புதுமை பெண்கள் என்ற பெயரில் ஆதிதிராவிடர் நலத்துறை வாயிலாக புதிய திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ்,
* பணிபுரியும் பெண்கள், கல்லூரி மாணவிகளுக்கு மானிய விலையில் இ-ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது. இந்த புதிய திட்டத்திற்கு கவர்னர் கைலாஷ்நாதனும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
* இந்த திட்டத்தில் பயன்பெற புதுவை அரசால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியல் சாதியினர் அல்லது பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். 5 ஆண்டுகள் தொடர்ந்து வசித்ததன் அடிப்படையில் புதுச்சேரியை சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஆண்டு குடும்ப வருமானம் ரூ.8 லட்சத்துகு்கு மிகாமல் இருக்க வேண்டும்.
* விண்ணப்பிக்கும் தேதியில் விண்ணப்பதாரரின் வயது 18 வயதுக்கு குறையாமலும், 40 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனம், தன்னாட்சி அமைப்புகள், நிறுவனங்கள் அல்லது வங்கிகளில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.
* ஒரு குடும்பத்தில் ஒரு பெண் அல்லது மாணவிக்கு மட்டுமே வாழ்நாளில் ஒருமுறை இந்த உதவி பெற தகுதியுடையவர் ஆவர். நீடித்த நோய் அல்லது இ-ஆட்டோ மானியத் திட்டத்தின் கீழ் உதவி பெறும் விண்ணப்பதாரர் தகுதியற்றவர்.
* விண்ணப்பதாரர் தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் மோட்டார் சைக்கிள் கியர் இல்லாத அல்லது மோட்டார் சைக்கிள் கியர் கொண்ட ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர், இளங்கலைப் பட்டப்படிப்பு மாணவியாக இருந்தால், பிளஸ்-2 தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
* முதுகலைப் பட்டப்படிப்பாக இருந்தால், இளங்கலை பட்டப்படிப்புத் தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டப்படிப்பு மாணவியாக இருந்தால், முதுகலைப் பட்டப்படிப்புத் தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
* தூரமான பகுதிகளில் வசிக்கும் பணிபுரியும் பெண்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விதவைகள், மற்றும் 35 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பணிபுரியும் பெண்கள், வேலைக்கான போதுமான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பயனாளிகள் தேர்வு நடத்தப்பட உள்ளது. இ-ஸ்கூட்டரின் விலையில் 75 சதவீத மானியம் அல்லது ரூ.ஒரு லட்சம் இதில் எது குறைவோ அது வழங்கப்படும்.
இதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் பி.எம்.இ.டிரைவ் திட்டத்தின் கீழ் மானியம் பெற்ற பிறகு, அதிகபட்சமாக ஒரு வாகனத்திற்கு ரூ.5 ஆயிரம் பயனாளியின் கணக்கில் செலுத்தப்படும். தேர்தலுக்கு முன் இந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.
- பொதுமக்கள் நம்ம ஊரு டாக்ஸி செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- போக்குவரத்து துறையின் வலைத்தளம் மற்றும் அரசு டிஜிட்டல் சேனல்களிலும் அதிகாரப்பூர்வ பதிவிறக்க இணைப்புகள் கிடைக்கும்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசு அங்கீகாரத்துடன் பாதுகாப்பான பயணத்துக்கான 'நம்ம ஊரு டாக்டாக்ஸி' அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த செயலியில் நியாயமான கட்டணம், நேரடி சவாரி கண்காணிப்பு, சரி பார்க்கப்பட்ட ஓட்டுனர் சுய விவரம், 24 மணி நேரமும் உதவி மையம், எஸ்.ஓ.எஸ். பாதுகாப்பு வசதி உள்ளிட்டவைகள் இடம் பெற்றுள்ளன.
இந்த செயலி புதுச்சேரியில் எலெக்ட்ரிக் ஆட்டோ மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் வைத்துள்ள அனைவரும் மிகவும் எளிதாக பயன்படுத்தும் வகையில் தமிழ், ஆங்கிலத்தில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் பாதுகாப்பான, வெளிப்படையான மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்குகிறது. பணம் அல்லது யு.பி.ஐ. கட்டண பரிவர்த்தனை மூலம் கட்டணம் செலுத்தும் வசதியும் உள்ளது.
பொதுமக்கள் நம்ம ஊரு டாக்ஸி செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது பயணிகளுக்கும், எலெக்ட்ரிக் ஆட்டோ, ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் தனித்தனி செயலிகள் உள்ளது.
போக்குவரத்து துறையின் வலைத்தளம் மற்றும் அரசு டிஜிட்டல் சேனல்களிலும் அதிகாரப்பூர்வ பதிவிறக்க இணைப்புகள் கிடைக்கும்.
இந்த தகவலை புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
- ஆந்திராவில் புயல் கரையை கடக்கும் போது 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை.
- 1800 4252303, 0884-2321223, 0884-2323200 ஆகிய உதவி எண்களும் அறிவிக்கப்பட்டது.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மோன்தா புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது. இது மேற்கு திசையில் நகர்ந்து ஆந்திராவின் மசூலிப்பட்டினம், கலிங்கப்பட்டினம் இடையே இன்றிரவு தீவிர புயலாக கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனிடையே, 'மோன்தா' புயல் எதிரொலியாக ஏனாமில் இன்று பகல் 12 மணிக்கே கடைகள், வணிக நிறுவனங்களை மூட புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவில் புயல் கரையை கடக்கும் போது 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கையாக ஏனாம் மண்டல நிர்வாக அதிகாரி அன்கித் குமார் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 1800 4252303, 0884-2321223, 0884-2323200 ஆகிய உதவி எண்களும் அறிவிக்கப்பட்டது.
- அக்டோபர் 3-ந்தேதி அரசு விடுமுறையாக அறிவித்ததற்கு ஈடாக நாளை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இயங்குகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் சனிக்கிழமையான நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என அரசு தெரிவித்துள்ளது.
ஆயுத பூஜைக்கு அடுத்த நாள் அதாவது அக்டோபர் 3-ந்தேதி அரசு விடுமுறையாக அறிவித்ததற்கு ஈடாக நாளை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இயங்குகிறது.
- தொழில் தொடங்குவதை எளிதாக்கும் சட்டத்தின் கீழ் அரசு துறைகளுக்கு அனுமதி அளிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்படுகிறது.
- சட்டமன்றத்தின் பட்ஜெட் அறிவிப்புகள், வாக்குறுதிகள் நிறைவேற்றம், மாநில அந்தஸ்து ஆகியவை குறித்தும் விவாதங்கள் நடைபெறும்.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 10-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
மார்ச் 12-ந்தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து 13 நாட்கள் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 27ந்தேதி மாநில அந்தஸ்து வலியுறுத்தும் அரசு தீர்மானத்தை நிறைவேற்றி முடிவடைந்தது.
6 மாதத்துக்கு ஒரு முறை சட்டமன்றம் கூட்டப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி இந்த மாதம் சட்டசபை கூட்டப்பட வேண்டும். இதற்காக வருகிற 18-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு புதுச்சேரி சட்டசபை கூடுகிறது.
இதனை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று அறிவித்தார்.
15-வது புதுவை சட்டப்பேரவையின் 6-வது கூட்டத்தொடரின் 2-வது பகுதி வருகிற 18-ந் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள பேரவை கூடத்தில் கூடுகிறது. பேரவையின் முன் வைக்க வேண்டிய சட்ட முன்வரைவுகள், ஏடுகள் இருந்தால் அவற்றை பேரவை முன் வைக்க அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதோடு, இந்த சட்ட பேரவை கூட்டம் எத்தனை நாள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யும். புதுச்சேரியில் தொழில் தொடங்குவதை எளிதாக்கும் சட்ட மசோதா மற்றும் ஜி.எஸ்.டி. 2-வது சட்ட திருத்த மசோதா ஆகியவை சபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தொழில் தொடங்குவதை எளிதாக்கும் சட்டத்தின் கீழ் அரசு துறைகளுக்கு அனுமதி அளிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்படுகிறது.
மேலும் சட்டமன்றத்தின் பட்ஜெட் அறிவிப்புகள், வாக்குறுதிகள் நிறைவேற்றம், மாநில அந்தஸ்து ஆகியவை குறித்தும் விவாதங்கள் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஊழியர்கள் கூட்டுப் போராட்டக் குழு மூலம் 4 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது.
- தொழிற்சங்கத்தினர் முதலமைச்சர் ரங்கசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை பி.ஆர்.டி.சி.யில் 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் ஒப்பந்த ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரியும், நிரந்தர ஊழியர்கள் 7-வது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தியும் கடந்த 28-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தால் இன்று 12-வது நாளாக பஸ்கள் ஓடவில்லை. இதனால் புதுச்சேரியை சுற்றி உள்ள கிராம மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே, ஊழியர்கள் கூட்டுப் போராட்டக் குழு மூலம் 4 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்த நிர்வாகம் முன் வந்தது. இதனை எழுத்து பூர்வமாக உறுதிமொழியாக அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என, போராட்ட குழு தெரிவித்தனர்.
இந்த நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டம் பாயும் என பி.ஆர்.டி.சி. நிர்வாகம் எச்சரித்தது.
இந்த நிலையில் புதுவை சட்டமன்றத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், எதிர்க்கட்சி தலைவர் சிவா, நேரு எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் தொழிற்சங்கத்தினர் முதலமைச்சர் ரங்கசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் ஒப்பந்த ஊழியர்களுக்கான சம்பளத்தை ரூ.10 ஆயிரம் உயர்த்துவதாகவும், நிரந்தர ஊழியர்களுக்கு அகவிலைப்படியை படிப்படியாக உயர்த்தி தருவதாகவும் உறுதி அளித்தார்.
இதனையடுத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
இன்று மாலை முதல் பஸ்களை இயக்குவதாக கூறி முதலமைச்சர் ரங்கசாமியிடம் தெரிவித்து சென்றனர். முதலமைச்சர் ரங்கசாமியிடம் பேச்சுவார்த்தையில் பி.ஆர்.டி.சி மேலாண் இயக்குனர் சிவக்குமார் இருந்தார்.
- ஊழியர்களின் குறைந்தபட்ச ஊழியத்தை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- போராட்டத்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் (பி.ஆர்.டி.சி.) பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிரந்தர ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைத்த சம்பளத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 28-ந் தேதி முதல் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து பி.ஆர்.டி.சி. மேலாண் இயக்குனர் சிவக்குமார் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்த நிலையில் எழுத்துப் பூர்வமான உறுதிமொழி கடிதம் கேட்டனர். ஆனால் நிர்வாகம் தரப்பில் உறுதிமொழி கடிதம் வழங்காததால் பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 11-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்தது.
இந்தநிலையில் போரட்டத்தில் ஈடுபட்டு வரும் பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குனர் சிவக்குமார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:-
புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழக விதிகளின்படி குறைந்தபட்ச ஊதிய கொள்கைளை முறையாக அமல்படுத்தி வருகிறது. இந்தநிலையில் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊழியத்தை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தநிலையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிநிரந்தரம் வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிற்கு எதிராக கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
கடந்த 28-ந் தேதியில் இருந்து 11 நாட்களாக ஒப்பந்த விதிகளை மீறி தொடர்ந்து சட்ட விரோதமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தின் ஒப்பந்த உடன்படிக்கை மற்றும் கொள்கையின்படி, முன் அனுமதியின்றி தொடர்ந்து 8 நாட்களுக்கு மேல் பணிக்கு வராத ஊழியர்களின் மீது பணி நீக்கம் போன்ற ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். மீறினால் 'எஸ்மா' (அத்தியாவசிய சேவை பராமரிப்பு சட்டம்) எந்த முன்னறிவிப்பு இன்றி பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார். எனவே விரைவில் அவர்கள் பணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர்.
- அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் சிவப்பு ரேசன் கார்டு பெற தகுதியுள்ளவர்களாக இருப்பர்.
புதுச்சேரி:
புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் ரேசன் கார்டுகளை கணக்கிட்டு வழங்கப்படும் இலவச அரிசியில் பல கோடி மோசடி நடந்துள்ளது என்றும் இதுதொடர்பாக விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என புதுச்சேரியை சேர்ந்த வக்கீல் பாலமுருகன் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களுடன் தலைமை செயலரிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து வக்கீல் பாலமுருகன் கூறியதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 3 லட்சத்து 62 ஆயிரத்து 136 ரேசன் கார்டுகள் உள்ளன. இதில் மஞ்சள் ரேசன் கார்டுகள் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 404. சிவப்பு ரேசன் கார்டுகள் 2 லட்சத்து 6 ஆயிரத்து 7. ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற்குள் இருப்பவர்களுக்கு தான் அவர்கள் வறுமையில் உள்ளதாக கருதி சிவப்பு ரேசன் கார்டு வழங்கப்படுகிறது.
அப்படி இருக்கும்போது மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் சிவப்பு ரேசன் கார்டு பெற தகுதியுள்ளவர்களாக இருப்பர். தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் குடும்பத்தினர் கண்டிப்பாக சிவப்பு ரேசன் கார்டு பெற தகுதியுடையவர்களாக இருக்க மாட்டார்கள்.
எனவே தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் அடிப்படையில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரேசன் கார்டு மோசடியாக பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டிற்கு ரூ.63 கோடியே 30 லட்சத்து 24 ஆயிரம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த மோசடி சம்பந்தமாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதுச்சேரியில் ஷோரூம்கள் போல பெரிய மதுக்கடைகள் நகர பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
- அரசின் வருவாயை பெருக்குவதற்காக மதுபானங்கள் விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி என்றாலே பிற மாநில மக்கள் நினைவுக்கு வருவதில் மதுபானமும் ஒன்று.
புதுச்சேரியில் மதுபானம் விலை குறைவு என்பதோடு, சுமார் 800 முதல் 900 பிராண்டுகளில் விதவிதமான மது வகைகள் கிடைக்கும். அதோடு, நின்று கொண்டே மது அருந்திவிட்டு செல்வது முதல், குளு குளு ஏசி வசதியுடன் மது அருந்தும் வசதிகளுடன் மதுபார்களும் உள்ளது.
புதுச்சேரிக்கு வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா வரும் பயணிகளில் பெரும்பாலானவர்கள் மது வகைகளை ருசிப்பதற்காகவே வருகின்றனர். இதற்காகவே புதுச்சேரியில் ஷோரூம்கள் போல பெரிய மதுக்கடைகள் நகர பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு வார இறுதி நாட்களில் இளைஞர்கள், தங்களுக்கு தேவையான மது வகைகளை தேர்வு செய்து வாங்கி செல்வதை பார்க்க முடியும். இது மட்டுமின்றி புதுச்சேரி அரசுக்கு சுமார் ரூ.1000 கோடி வரை கலால்துறை மூலம் வருமானமும் கிடைக்கிறது.
கடந்த காலங்களில் மதுபான விலையை ரூ.2 முதல் ரூ.10 வரை உயர்த்துவார்கள். மதுபான விலை உயர்ந்தாலும், அண்டை மாநிலங்களின் விலையை விட எப்போதும் புதுச்சேரியில் மதுபானம் விலை குறைவாக இருக்கும்.
ஆனால் தற்போது அரசின் வருவாயை பெருக்குவதற்காக மதுபானங்கள் விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கீழ்மட்ட அளவில் உள்ள மது வகைகள் கூட குவார்ட்டருக்கு ரூ.12 முதல் ரூ.15 வரை உயர்ந்துள்ளது. பெரும்பாலனவர்கள் விரும்பி அருந்தும் பிராண்டுகள் விலை குவார்டருக்கு ரூ.30 வரை விலை உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய விலைப்பட்டியலுடன் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வு மது பிரியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விலை உயர்வு மது விற்பனையாளர்களிடையே பெரும் கவலையையும் ஏற்படுத்தியிருந்தது.
வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புதுச்சேரிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். கடந்த 3 நாட்களில் நாள்தோறும் நடைபெற்ற விற்பனையில் 20 முதல் 25 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது.
வார நாட்களில் வழக்கமாக மது அருந்தக் கூடியவர்கள் விலை உயர்வால் தங்களின் பிராண்டுகளை மாற்றியுள்ளனர். விலை குறைவான பிராண்டுகளுக்கு நாள்தோறும் மது அருந்துவர்கள் நகர்ந்துள்ளனர். இதுவும் விற்பனையை பாதித்துள்ளது.
இதுகுறித்து மதுபான விற்பனையாளர் ஒருவர் கூறியதாவது:-
கடந்த காலங்களில் பல முறை மதுபான விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 25 ஆண்டுகளில் தற்போது உயர்த்தப்கபட்டுள்ள விலை உச்சபட்சமாகும். இதனால் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மது வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
இந்த விலை உயர்வு மட்டுமின்றி, மது உரிமை கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் 20 முதல் 25 சதவீதம் வரை மதுபான விற்பனை சரிந்துள்ளது. இருப்பினும் முழுமையாக ஒரு மாத காலம் மது விற்பனையை கணக்கிடும் போதுதான் எந்த அளவுக்கு விற்பனை சரிந்துள்ளது என தெரியவரும் என்றார்.
- வீடு கட்டும் திட்டம் 1.0 கீழ் விண்ணப்பங்கள் அளித்து, வீட்டு மானியம் பெறாதவர்கள், அடித்தளம் வரை வீடு கட்டியவர்கள் 2.0 திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.
- பொதுமக்கள், விண்ணப்ப படிவங்களை புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு 2003-ம் ஆண்டு முதல் பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு வீடு கட்டும் திட்டத்தை மாநில அரசின் நிதியின் மூலம் செயல்படுத்தி வந்தது.
மத்திய அரசு 2015-ம் ஆண்டு பிரதமர் நகர்ப்புற வீடு கட்டும் திட்டம் அறிமுகப்படுத்தியபோது, புதுச்சேரி அரசின் பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு வீடு கட்டும் திட்டத்தோடு ஒருங்கிணைத்து, செயல்படுத்தியது. தொடர்ந்து மத்திய அரசு, பிரதம மந்திரி நகர்புற வீடு கட்டும் திட்டம்-2.0 என்கிற புதிய திட்டத்தை செப்டம்பர் 2024-ல் அறிமுகப்படுத்தியது.
இந்த புதிய திட்டத்தையும் புதுச்சேரி அரசு காமராஜர் வீடு கட்டும் திட்டத்துடன் ஒன்றிணைத்தது. மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் 22 ஆயிரத்து 500 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் பொது மற்றும் பிற பின்தங்கிய பிரிவினர்களுக்கு ரூ.5 லட்சம் நிதியை உயர்த்தி அளிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் 2.0 மூலம் அளிக்கப்படும் நிதி உதவி ரூ.2.25 லட்சத்துடன், புதுச்சேரி மாநில அரசின் பங்களிப்பாக ரூ.2.75 லட்சமும் சேர்த்து பயனாளிகளுக்கு மொத்தமாக ரூ.5 லட்சம் வழங்கப்பட உள்ளது. வீடு கட்டும் திட்டம் 1.0 கீழ் விண்ணப்பங்கள் அளித்து, வீட்டு மானியம் பெறாதவர்கள், அடித்தளம் வரை வீடு கட்டியவர்கள் 2.0 திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.
சொந்தமாக நிலம் வைத்திருக்கும் தகுதியுள்ள வீடற்ற பயனாளிகள், தங்கள் கனவு இல்லத்தை சொந்தமாக்க, இந்த ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள், விண்ணப்ப படிவங்களை புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் புதுச்சேரி நகர மற்றும் கிராம அமைப்பு துறை இணையதளமான www.tcpd.py.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மத்திய அரசின் இணையதளமான https://pmaymis.gov.in/PMAYMIS2_2024/Auth/Login.aspx மூலமும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.
உயர்த்தப்பட்ட வீடு கட்டும் நிதியுதவிக்கான விண்ணப்ப படிவங்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிமுகப்படுத்தினார்.
- ரங்கசாமியை நோக்கி திடீரென வேகமாக ஓடி வந்து ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என கும்பிட்டபடி குனிந்து நின்றார்.
- போதையில் இருந்த அவர் போலீசாரின் பிடியை மீறி முதலமைச்சர் ரங்கசாமி காலில் விழுவதிலேயே குறியாக இருந்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி முதலமைச்சா ரங்கசாமியிடம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி காலில் விழுந்து ஆசி பெறுவது வழக்கம்.
முதலமைச்சர் ரங்கசாமியும் சலிக்காமல் அவர்களுக்கு தலையில் கைது வைத்து ஆசி வழங்குவார். இந்த நிலையில் புதுவை அரசு சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
புதுச்சேரி முருகா தியேட்டர் சந்திப்பில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து உறுதி மொழி ஏற்றனர். அப்போது ஒருவர் முதலமைச்சர் ரங்கசாமியை நோக்கி திடீரென வேகமாக ஓடி வந்து ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என கும்பிட்டபடி குனிந்து நின்றார். இதில் பதட்டமான பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை மடக்கி பிடித்தனர்.
போதையில் இருந்த அவர் போலீசாரின் பிடியை மீறி முதலமைச்சர் ரங்கசாமி காலில் விழுவதிலேயே குறியாக இருந்தார். இதையடுத்து அவரை அப்புறப்படுத்தி சோதனை செய்தனர். அவரிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை என்ற பின் பாதுகாப்பு அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்.
விசாரணையில் அவர் மதுரையை சேர்ந்த அழகர் என்பதும் புதுவையில் ஒரு ஓட்டலில் தங்கி சமையல் மாஸ்டராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் புதுச்சேரி முதலமைச்சரின் எளிமை பிடித்ததால் அவரிடம் ஆசீர்வாதம் வாங்க ஓடி வந்ததாக தெரிவித்தார்.
விடாப்பிடியாக அந்த போதை ஆசாமி அங்கிருந்து செல்ல மறுத்ததால் போலீசார் முதலமைச்சர் ரங்கசாமியின் காலில் விழுந்து அவரை ஆசீர்வாதம் பெற வைத்து பின்னர் அவரை அனுப்பி வைத்தனர்.
- தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும்.
- வான்வழி தாக்குதலின் போது வெளியே செல்வதும், புகைப்படம் எடுப்பதும் கூடாது.
புதுச்சேரி:
புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்தியா-பாகிஸ்தான் போர் பதட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வான்வழித் தாக்குதல் ஏதேனும் நடந்தால் உங்கள் வீட்டில பாதாள அறை இருக்க வாய்ப்பில்லை என்பதால் குளியல் அறையை தேர்வு செய்யலாம். தாக்குதலில் ஜன்னல் கதவுகள் நொறுங்காமல் இருக்க பிளாஸ்டிக் சீட் வைத்து ஒட்டி விடுங்கள்.
வீட்டில் உள்ள மெத்தை, மேஜை, புத்தகங்கள் வைத்து தற்காலிக குடில் அமைத்து கொள்ளுங்கள். வாய் சிறிதாக திறந்த நிலையில் பின்னந்தலையினை கைகளால் மறைத்தவாறு தரையில் குப்புறப்படுத்து கொள்ள வேண்டும்.
போதிய உணவு, குடிநீர் இருப்பை உறுதி செய்யுங்கள். குளியல் வாளி, டப் என அனைத்திலும் நீர் வைத்துக் கொள்ள வேண்டும். மின் இணைப்பு, சமையல் எரிவாயு இணைப்பை அனைத்து வையுங்கள். ஜன்னல் அருகே இருக்காதீர்கள். பறந்து வரும் இடிபாடுகளிடம் இருந்து காத்து கொள்ள போர்வை, விரிப்புகள் கொண்டு மூடி கொள்ள வேண்டும்.
அபாய சங்கு ஒலிப்பதன் மூலம் விடுக்கப்படும் விமான தாக்குதல் குறித்த எச்சரிக்கைகளை பின்பற்றவும். உங்கள் சுற்று வட்டாரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். வான்வழி தாக்குதலின் போது வெளியே செல்வதும், புகைப்படம் எடுப்பதும் கூடாது.
சுவர், ஜன்னல் அருகே நிற்க கூடாது. பெரும் கூட்டமாக நிற்க கூடாது. தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும். அனைத்தும் சரியாகி விட்டதாக அரசு அறிவிக்கும் வரை வீட்டினுள் இருங்கள். வான்வழி தாக்குதல் குறித்த எச்சரிக்கை ஆபத்துக்கான சமிக்கை என்பதால் அதை அலட்சியப்படுத்த கூடாது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






